நண்பர்கள் சகோதரர்களான கதை!
அமெரிக்காவைச் சேர்ந்த 74 வயது ஆலன் ராபின்சனும், 72 வயது வால்டர் மெக்பார்லேனும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள். தற்போது இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது!
“நானும் மெக்பார்லேனும் 60 ஆண்டுகால நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தோம். பிறகு இதே பகுதியில் வேலை செய்து, திருமணமும் செய்துகொண்டோம். எங்கள் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படித்தார்கள். எங்கள் பேரக் குழந்தைகளும் அதே பள்ளியில் படித்தார்கள். அதனால் எங்கள் நட்பு நீண்ட காலமாக நிலைத்து நின்று விட்டது.
நாங்கள் இருவருமே வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்கள். அதனால் உண்மையான பெற்றோர் பற்றிய தகவல்களை தேட ஆரம்பித்தோம். அதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்தபோதுதான், நானும் மெக்பார்லேனும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தோம். எங்களை பெற்றெடுத்தது யார் என்பது புதிராகவே இருந்தாலும், நாங்கள் இருவரும் சகோதரர்கள் என்ற விஷயத்தில் சந்தோஷப்படுகிறோம். வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இதுதான்! நட்பு இப்போது உறவாகவும் மாறிவிட்டது” என்கிறார் ஆலன் ராபின்சன்.