மரத்வாடா வறட்சிக்கு பா.ஜனதா அரசே காரணம் : அசோக் சவான் குற்றச்சாட்டு

மரத்வாடா வறட்சிக்கு பா.ஜனதா அரசின் தவறான நீர்வள மேலாண்மையே காரணம் என அசோக் சவான் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-10-31 23:19 GMT
மும்பை,

காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மரத்வாடா மண்டலத்தில் தற்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நேற்று அவுரங்காபாத் பர்தாப்பூர் பகுதியில் பேசியதாவது:-

சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் உயரமான தலைவர்களில் ஒருவர். சிதறிக்கிடந்த இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக்கிய பெருமை அவரை சாரும். நான் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு உலகில் உயரமான சிலை அமைத்தவர்கள் தான் உலகின் மிகப்பெரிய பொய் வாக்குறுதிகளுக்கும் சொந்தக்காரர்கள் ஆவர்.

2014-ம் ஆண்டு பா.ஜனதா அரசு வெறும் 30 சதவீத வாக்குகளின் பலத்தில் தான் ஆட்சியை அமைத்தது. மீதமுள்ள வாக்குகள் சிதறிவிட்டன.

இந்த முறை ஓட்டுகள் சிதறிப்போக நாங்கள் விடமாட்டோம். எனவே தான் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறோம்.

சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி வருகிறது. சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக வலதுசாரி அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏன் வெடிகுண்டுகளை தயாரிக்கிறார்கள்? இந்து- முஸ்லிம்களிடையே பிரிவினையை தூண்டிவிடத்தான் அப்படி செய்கிறார்கள்.

பா.ஜனதா அரசு அயோத்தி பிரச்சினையை கையில் எடுக்கிறது என்றால் தேர்தல் நெருங்குகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

கடந்த ஆண்டு இதே நாளில் மரத்வாடா மண்டலத்தில் உள்ள ஜெயக்வாடி அணையில் நீர் நிறைந்திருந்தது. ஆனால் பா.ஜனதா அரசின் தவறான நீர்வள மேலாண்மை கொள்கைகளால் தற்போது அந்த அணையில் 27 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

தற்போது இங்கு நிலவும் வறட்சிக்கு பா.ஜனதா அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்