ராமநாதபுரம் அருகே ஊருணியில் எரிவாயு கசிவு; கிராம மக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் அருகே ஊருணியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம், தனியாருக்கு சொந்தமான மின் நிலையம், மத்திய அரசின் எரிவாயு பகிர்வு முனையம் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
இந்த பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் விவசாய நிலங்களை அழித்து எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதாகவும், இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை மரங்கள் அழிந்து வருகிறது என்றும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது எரிவாயு குழாய்கள் வெடித்து ஆபத்தான நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதற்கு தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தெற்குக்காட்டூர் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் பணிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சுமார் 14 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இதில் இயற்கை எரிவாயு பம்பிங் ஸ்டேஷன் அமைக்க ஏற்பாடு செய்து அதற்கான பூமி பூஜை நடத்த ஆயில் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதை அறிந்த வழுதூர், தெற்குக்காட்டூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் பல முறை வலியுறுத்தியும், கோரிக்கை விடுத்தும் வந்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படாத நிலையில் பொதுமக்கள் இந்த கூட்டத்தினை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் நேற்று வழுதூர் விலக்கு சாலை அருகே பூமிக்கு அடியில் உள்ள இயற்கை எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு அங்குள்ள ஊருணியில் நீர் குமிழிகள் உருவானதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற வாலாந்தரவை ஊர் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் ஓ.என்.ஜி.சி. மேலாளர் இளங்கோ, கெயில் நிறுவன மேலாளர் ஜெகன்நாதன் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஊருணியின் அடியில் எங்கள் நிறுவனத்திற்கு உரிய ஆயில் குழாய்கள் செல்லவில்லை என கூறியதைத் தொடர்ந்து நீண்ட நேரம் அந்த பகுதி பொதுமக்கள், நிறுவனங்களின் மேலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவன மேலாளர்களிடம் இது குறித்த விவரங்களை கேட்டு பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்க கூறினர். மீண்டும் இரு நிறுவனங்களின் மேலாளர்களும் அந்த பகுதியில் தங்களது எரிவாயு குழாய்கள் செல்லவில்லை என உறுதிபட கூறியததைத் தொடர்ந்து பொதுமக்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் தாசில்தார்(பொறுப்பு) சாந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், துணை தாசில்தார் மாதவன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவன மேலாளர்களை அழைத்து இயற்கை எரிவாயு செல்லக்கூடிய வரைபடத்தை கொண்டு வரச் செய்து வரைபடத்தை பார்த்து ஊருணி பகுதியில் குழாய் இணைப்பு செல்கிறதா என ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்த பகுதி மக்களிடம் உங்களின் கோரிக்கை என்ன என்று கேட்ட போது, மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினர். இதனைத் தொடர்ந்து வருகிற 9–ந்தேதி வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்திலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஊருணியில் மணலை கொட்டி கசிவு ஏற்படக்கூடிய இடத்தை கண்டுபிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராதிகா ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜனிடம் முறையிட்டு கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் மழையின்றி எங்கள் பகுதியில் உள்ள ஊருணி முழுவதும் வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஊருணி நிரம்பி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்று இருந்த நிலையில் வழுதூர் மின் நிலையத்தில் இருந்து கழிவுநீர் எங்கள் ஊருணியில் கலந்து விட்ட நிலையில் தற்போது எங்களுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக ஊருணியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.