டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உள்ளதா? கடலூரில் வீடு, வீடாக சென்று கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
கடலூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உள்ளதா? என்று கலெக்டர் அன்புச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கடலூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் குழந்தை காலனி மற்றும் ஆலைக்காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ் கொசு உள்ளதா? என திடீரென ஆய்வு செய்தார். மேலும் தெருக்களில் உள்ள வடிகால் வாய்க்கால் சுத்தமாக இருக்கிறதா எனவும் பார்வையிட்டார்.
அதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகள் வருகை பதிவேடு மற்றும் சமயலறை பகுதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் தெருவில் உள்ள கடைகளை பார்வையிட்ட கலெக்டர், கடைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு வியாபாரிகளை கேட்டுக் கொண்டார். பின்னர் மார்க்கெட் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டினை பார்வையிட்டு அப்பகுதியினை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், அங்குள்ள உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.