3-வது நாளாக சாலை மறியல் சத்துணவு ஊழியர்கள் 321 பேர் கைது
ஊட்டியில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 321 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம், சத்துணவு திட்டத்துக்கு என தனித்துறை, ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு 9 மாதங்கள் மகப்பேறு விடுமுறை, பணியின்போது ஏற்படும் விபத்து பாதிப்புகளுக்கு இழப்பீடு, ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி, கூடலூரில் கடந்த 2 நாட்களாக சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. நேற்று 3-வது நாளாக ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவதாஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 321 பேரை ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். சத்துணவு ஊழியர்களின் மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறும்போது, 35 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊதியக்குழு வரையறுத்துள்ள காலமுறை ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்டங்களால் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.