கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-10-31 22:45 GMT
கரூர், 
கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மகாவிஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போல கிராம உதவியாளர்களுக்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்