நெல்லை டவுன் நகைக்கடை கொள்ளையில் வாலிபர் கைது

நெல்லை டவுன் நகைக்கடையில் 1¾ கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-31 21:30 GMT
நெல்லை, 

நெல்லை டவுன் நகைக்கடையில் 1¾ கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நகைக்கடையில் கொள்ளை

நெல்லை டவுன் கோடீஸ்வரநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 33). இவர் டவுன் மேலரத வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் முன்பு உள்ளது. மணிகண்டன் வழக்கம் போல் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் வந்து பார்த்த போது, ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, சோக்கேஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த தங்க சங்கிலிகள், நெக்லஸ், வளையல்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 1¾ கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கொள்ளையர்களை பிடிக்க துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்தது பதிவாகி உள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கைது 

இந்த வழக்கு தொடர்பாக 35 வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொள்ளையடித்த நகைகளை ஒரு நகை அடக்கு கடையில் அடகுவைத்து இருப்பதாக கூறினார். அந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்