திங்களூர் அருகே விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற முயன்ற தாத்தாவும் குதித்தார்

திங்களூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமியையும், தாத்தாவையும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Update: 2018-10-30 22:23 GMT

பெருந்துறை,

திங்களூர் அருகே உள்ள மேற்குபாளையம் நடுத்தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான 180 அடி ஆழ கிணறு வீடு அருகே உள்ளது. கிணற்றில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. பழனிச்சாமியின் மகள் ஜோதிமலர். அவருடைய கணவர் செல்லக்குமார். இவர்களுக்கு சவுந்தரா (11) என்ற மகள் உள்ளாள். இவள் 5–ம் வகுப்பு வரை படித்தாள். அதன்பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர்.

தாத்தா பழனிச்சாமி வீட்டில் வளர்ந்து வருகிறாள். நேற்று மதியம் 2.30 மணி அளவில் சவுந்தரா கிணற்றையொட்டி விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவள் கிணற்றில் தவறி விழுந்தாள். இதை பார்த்த பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கிணற்றில் குதித்தார். இதில் சவுந்தராவை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் தண்ணீரில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்தனர். இதனால் 2 பேரும் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சலிட்டார்கள்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். உடனே இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரும் உயிருடன் மீட்கப்பட்டார்.

மேலும் செய்திகள்