மினிவேனில் இருந்து ரூ.2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் - வேலூர் வனத்துறையினர் விசாரணை

வாகனங்கள் பழுது பார்க்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேனில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-10-29 23:42 GMT
அடுக்கம்பாறை,

வேலூர் அருகே வாகனங்கள் பழுது பார்க்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேனில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூரை அடுத்த சாத்துமதுரை பஸ் நிறுத்தம் அருகே கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மையம் உள்ளது. இதனை கணியம்பாடியை அடுத்த குருமப்பாளையத்தை சேர்ந்த காந்தி மகன் இந்தியா நடத்தி வருகிறார். இங்கு கடந்த 27-ந் தேதி 2 வாலிபர்கள் கூண்டு கட்டிய மினிவேனை கொண்டு வந்து நிறுத்தினர்.

அவர்கள் அங்கிருந்த மெக்கானிக்கிடம், வரும் வழியில் மினிவேன் பழுதடைந்து விட்டது. எனவே அதனை இங்கு நிறுத்தி செல்கிறோம். உடனடியாக சரிசெய்து தரும்படியும், சிறிது நேரத்தில் வருவதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து 2 வாலிபர்களும் சென்று விட்டனர். மினிவேனின் கூண்டு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கூறியபடி சிறிதுநேரத்தில் அங்கு வரவில்லை.

மினிவேனில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து 2 பேரும் சரியாக தெரிவிக்காததால் மெக்கானிக் அதனை சரி செய்யவில்லை. இந்த நிலையில் 2 நாட்களாகியும் வாலிபர்கள் வராததால் மினிவேனில் சட்ட விரோதமாக ஏதாவது பொருட்களை கடத்தி வந்திருக்கலாம் என வாகன பழுதுபாக்கும் மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, பாட்சா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மினிவேன் கூண்டின் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில், 90 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகள் மினிவேனுடன் வேலூர் வனச்சரக அலுவலர் கோவிந்தராஜ், வனவர் பாண்டுரங்கன் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனஅலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட செம்மர கட்டைகளை வேலூர் வனகோட்ட தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக வேலூர் வனத்துறையினர் வழக்குப்பதிந்து மினிவேனில் செம்மர கட்டைகள் கடத்தி வந்தவர்கள் யார்? மினிவேன் உரிமையாளர் யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்