சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி, கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், நகரசபை மேலாளர் முத்து செல்வத்திடம் கோரிக்கை மனுவை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
இதேபோன்று கழுகுமலை-சங்கரன்கோவில் மெயின் ரோடு மேல கேட் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் சாலமோன், முன்னாள் நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுவாமிதாஸ், ராமச்சந்திரன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.