ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சிதம்பரம்,
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி கடலூர் தெற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ், சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க முதன்மை செயலாளர் பு.த.அருள்மொழி, பசுமைத்தாயக மாநில செயலாளர் அருள், சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன், ஒழுங்குநடவடிக்கைக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், செயற்குழு உறுப்பினர் ஜெயசஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகி விடுவார்கள்.
இதனால் கடலூர், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கொள்ளிடம் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் 30 அடி அகலத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக பூமிக்கு கீழே உள்ள பாறைகள் சக்திவாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படும். இதனால் நில அதிர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும்.
தமிழகத்தில் உள்ள பூமி இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்கவேண்டும். நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழவேண்டும். இந்த பகுதியில் யாராவது ஆழ்துளை கிணறுகள் அமைக்க குழாய்களை இறக்கினால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த திட்டம் செயல்பட வந்தால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். போராட்டமும் நடத்துவோம்.
மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் முன்வருவோம். தமிழ்நாட்டில் மழை இல்லை. ஏரி குளங்களில் தண்ணீர் இல்லை. மழையை பெற மரங்களை நடவேண்டும். மேட்டூர் அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீரை தேக்கி வைக்கமுடியாமல் 173 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு சென்றது. மழைநீரை தேக்கி வைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசின் கடன் 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. எந்த திட்டங்களும் செயல்படாமல் இப்படி கடன் சுமை உள்ளது. எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதினிலேயே பதவியை பார்த்துவிட்டேன். மக்களை பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஊழல் செய்தார் என்று எம்.ஜி.ஆர். தனிகட்சி தொடங்கினார். ஆனால் எம்.ஜி.ஆரால் லட்சம் ஊழல் வாதிகள் உருவாகிவிட்டார்கள்.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரப்போகின்றது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள், கொண்டு வர நாங்கள் விடமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் கலையரசன், மாநில இளைஞர் சங்க துணைசெயலாளர் செல்வமகேஷ், மாவட்ட துணைத்தலைவர் வெள்ளூர்பாபு, மாவட்ட தலைவர் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் சவ்ராஜா, மாநில துணை அமைப்பு செயலாளர் அருள்கோவிந்தன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பால்ஸ்ரவிக்குமார், அருள், வெற்றி, மாநில மகளிரணி தலைவி கவுரி, மகளிரணி செயலாளர் சிலம்புசெல்வி, மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பசுமைத்தாயக செயலாளர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், ரஞ்சித், கார்த்திக், மோகனசுந்தரம், சிலம்பரசன், செல்வம், ராஜேஷ், தவசீலன், அன்பரசன், தெய்வராசன், மோகன், நகர செயலாளர்கள் அய்யப்பன், ஆரிஸ், நகர தலைவர்கள் ஞானகுரு, இளையபெருமாள், நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்கம் இளங்கீரன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கல்லீஸ்கலியபெருமாள் நன்றி கூறினார்.