20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் காமராஜ் பேச்சு

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Update: 2018-10-29 22:15 GMT
திருவாரூர், 
திருவாரூர் பனகல் சாலையில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, ரயில்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சி போய்விடும், நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு கண்டார். அவருடைய கனவுக்கு துணை போன டி.டி.வி.தினகரன் சபதம் போட்டார். மு.க.ஸ்டாலினும், டி.டி.வி. தினகரனும் கண்ட கனவு ஒரு போதும் பலிக்காது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என கூறி கொண்டிருந்த டி.டி.வி.தினகரனுக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுய லாபத்திற்காக 18 பேரின் வாழ்க்கையை பறித்தவர் தினகரன். அதற்கு பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து டி.டி.வி.தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும். தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த இரண்டு தொகுதி மட்டுமல்ல 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத்தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன் விலகி அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராம், நகர செயலாளர் கலியபெருமாள், பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ், தகவல் தொழில்்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்