விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் ஷில்பா நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-29 22:41 GMT
நெல்லை,

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், அனைவரும் காப்பீடு செய்வதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பயிர் காப்பீட்டின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

அப்போது கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் 967 விவசாயிகள் தங்களது 832 ஏக்கர் நிலப்பரப்புக்கு காப்பீட்டு தொகை செலுத்தி உள்ளனர். நடப்பு பிசான பருவத்துக்கு நெல் பயிர் காப்பீட்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.388 ஆகும். இதற்கான காப்பீட்டு இழப்பு தொகையாக ரூ.25 ஆயிரத்து 820 வழங்கப்படும். இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே, விவசாயிகள் காப்பீடு செய்ய கணினி பட்டா, விதைப்பு சான்று, அடங்கல் சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 புகைப்படங்கள், பயிர் காப்பீட்டு பதிவு, முன்பதிவு விண்ணப்பம் ஆகியவற்றுடன் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகள், பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை இயக்குனர் செந்திவேல்முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்திராணி (வேளாண்மை) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்