ராஜபாளையத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
ராஜபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பல சரக்குக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 62). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் இவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சியினர் அப்பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வேறு யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.