அன்னவாசல் பகுதிகளில் விஷக்காய்ச்சல்: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஏராளமானோர் அனுமதி
அன்னவாசல் பகுதிகளில் விஷக் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையிலும் மற்றும் அன்னவாசலை சுற்றியுள்ள முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், மதியநல்லூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நேற்று காலை மருத்துவ பரிசோதனைக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் திரண்டதால் டோக்கன் வழங்கும் அறை, மருத்துவர் அறை, மருந்துகள் வழங்கும் அறை, ரத்த பரிசோதனை அறை, நோயாளிகள் தங்கும் அறை போன்ற இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது போன்ற நேரங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.