தொடர் அட்டகாசம் செய்த ஆண் புலி கூண்டில் சிக்கியது கிராம மக்கள் மகிழ்ச்சி

எச்.டி.கோட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த ஆண் புலி நேற்று கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-10-29 22:45 GMT
மைசூரு,

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்டு அடகனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி வனப்பகுதிகள் இருப்பதால், அடிக்கடி காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றிகள் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதுபோல் கடந்த 20 நாட்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து, ஆடு, கோழி, நாய்களை வேட்டையாடி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் புலியை பிடிக்க கூண்டுவைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகரஒலே வனத்துறையினர் அடகனஹள்ளி கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் இரும்பு கூண்டு வைத்தனர். கூண்டில் ‘பொறி‘யாக நாயை வனத்துறையினர் கட்டிவைத்திருந்தனர். மேலும் புலி நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி, கூண்டில் ‘பொறி‘யாக கட்டிவைக்கப்பட்டு இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றது. அப்போது கூண்டின் தானியங்கி கதவு தானாக மூடிக்கொண்டது. இதனால் புலி வசமாக கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது. மேலும் அது ஆக்ரோஷத்தில் உறுமிக்கொண்டே இருந்தது. நேற்று காலை இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கூண்டுடன் புலியை ஒரு லாரியில் ஏற்றி அதனை நாகரஒலே வனப்பகுதியில் அடர்ந்த காட்டில் கொண்டு போய் விட்டனர். பிடிபட்ட புலி 8 வயது நிரம்பியது என்றும், அது ஆண் புலி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த புலி கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்