இலங்கை அரசியல் குழப்பத்துக்கு இந்தியா-சீனாவின் தலையீடே காரணம் : திருமாவளவன் குற்றச்சாட்டு
இலங்கை அரசியலில் நிலவும் குழப்பத்துக்கு இந்தியா, சீனா அரசுகளின் தலையீடு தான் முக்கிய காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அரசியலில் நிலவும் குழப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் இந்தியா, சீனா அரசுகளின் தலையீடு தான் முக்கிய காரணம் ஆகும். இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்ற போட்டியை நடத்தி கொண்டிருக்கின்றன. இதில் சீன அரசின் கையே மீண்டும் மேலோங்கி இருக்கிறது.
இந்தநிலையில், ரனில் விக்ரமசிங்கே தான் பிரதமராக இருக்கிறார் என்று இலங்கை சபாநாயகர் அறிவித்திருப்பது எந்த பின்னணியில் என்று விளங்கவில்லை. யார் பிரதமர் என்பதை அவர்களின் பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம் தான் உறுதிப்படுத்த முடியும். இந்த இக்கட்டான சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களுக்கு மிகப்பெரிய கடமை உருவாகி உள்ளது.
தமிழர்களின் நலனை முன்னிறுத்தி யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்க வேண்டும். விக்ரமசிங்கே நல்லவரா?, ராஜபக்சே நல்லவரா? என்பதல்ல. யாரும் தமிழர்களின் நலனுக்கானவர்கள் இல்லை என்பது தெரியும்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போட்டி போடக்கூடிய நிலையில் விக்ரமசிங்கேவுக்கும், ராஜபக்சேவுக்கும் இடையில் நம்முடைய கோரிக்கைகளை முன்னிறுத்த வேண்டும்.
தமிழகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவெடுத்துள்ளது ஒருவகையில் சரிதான். மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது டி.டி.வி.தினகரன் தரப்பு முடிவாகும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்து செயல்பட்டால் தான் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளை எதிர்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கையாளும் யுக்தியாக இந்த அழைப்பு கருதப்படுகிறது. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பது என்ற அடிப்படையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நத்தம் அருகே சமுத்திராபட்டி, காட்டுவேலம்பட்டி, கோபால்பட்டி ஆகிய இடங்களில் கட்சி கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மைதீன்பாவா, தவச்செல்வன், தமிழ்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.