‘திடீர்’ உடல் நலக்குறைவு: மத்திய மந்திரி அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி சுமித்ரா மகாஜன், ராஜ்நாத்சிங் நலம் விசாரித்தனர்

மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-10-28 22:30 GMT
பெங்களூரு, 

மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பெங்களூருவுக்கு வந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், மத்திய மந்திரி அனந்த குமாருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனந்தகுமாரை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர், அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி அனந்தகுமார் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு, அவரது உடல் நிலை சீரானதை தொடர்ந்து இந்தியா திரும்பினார். இந்த நிலையில், மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜ்நாத்சிங் நலம் விசாரிப்பு

அனந்தகுமார் புற்று நோய் காரணமாக அவதிப்படுவதாகவும், இதற்காக தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய மந்திரி அனந்தகுமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பற்றி அறிந்ததும் நேற்று டெல்லியில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர், மத்திய மந்திரி அனந்தகுமார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அனந்தகுமாரின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டு அறிந்து கொண்டார்.

இதுபோல, மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நேற்று மதியம் டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார். அவர், தனியார் மருத்துவ மனைக்கு சென்று அனந்தகுமாரின் உடல் நலம் குறித்து உறவினர்கள், மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். அதே நேரத்தில் அனந்தகுமாருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாக தெரிகிறது. அனந்தகுமாரின் உடல் நலம் குறித்து மத்திய மந்திரி சதானந்த கவுடா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் நலம் விசாரித்தார்கள்.

உடல் நிலையில் முன்னேற்றம்

இந்த நிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம், மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்