வருசநாடு அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் சாவு
வருசநாடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகே முத்தூத்து கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது தோட்டத்திற்கு அருகிலேயே வீடு கட்டி விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு நிதீஷ்குமார், சசிகுமார் (வயது 8) என 2 மகன்கள் இருந்தனர். சசிகுமார் கீழபூசனூத்து கிராமத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இளையராஜா தனது தோட்டத்தில் நீர் தேக்கி வைப்பதற்கு 4 அடி ஆழத்தில் தொட்டி கட்டி வைத்துள்ளர். அதில் இருந்து வீட்டின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று காலை அந்த தொட்டியில் நீர் எடுத்து வருவதற்காக சசிகுமார் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவன் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். தண்ணீர் எடுக்க சென்ற சசிகுமாரை நீண்ட நேரம் காணவில்லை என்று இளையராஜா குடும்பத்தினர் அவனை தேடி சென்றனர். அப்போது சசிகுமார் தொட்டியில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த வருசநாடு போலீசார் அங்கு விரைந்து சென்று அவனுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.