வயதாகி விட்டதால் அரசியலில் ரஜினிகாந்த் களம் இறங்குவது சந்தேகம்தான் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
வயதாகி விட்டதால் அரசியலில் ரஜினிகாந்த் களம் இறங்குவது சந்தேகம் தான் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள். தினகரனை அ.தி.மு.க.வில் இணைய அழைக்கவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களைத்தான் அழைத்தோம். இது காலம் கடந்த அழைப்பு அல்ல. சரியான நேரத்தில் அழைக்கப்பட்ட அழைப்பு. பிரிந்து சென்றவர்களுக்கு முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. கமல்ஹாசன் கட்சி போன்று, பல கட்சிகள் ஒரு தேர்தலுக்கு பின்பு காணாமல் போய்விடும். எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். நாளையே தேர்தல் வந்தால் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயார். இது மனிதன் தொடங்கிய கட்சி அல்ல. புனிதன் ஆரம்பித்த கட்சி. அழிவது, மறைவது போன்று தெரியும், ஆனால் அழியாது, மறையாது. ரஜினிகாந்த் தனது ரசிகர்களை பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் கட்சிக்கு வராதீர்கள் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் கூறுவது எல்லா இயக்கத்துக்கும் பொருந்தும். பொது சேவை செய்யும் எண்ணத்தோடு வர வேண்டும். அதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார்.
1996–ம் ஆண்டு அவர் கட்சி தொடங்கி இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அவருக்கு வயதாகிவிட்டது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை. ரஜினிகாந்த் நல்ல மனிதர். வயதாகிவிட்டதால் அவர் அரசியலில் களம் இறங்குவது சந்தேகம் தான். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலம் குறையாது.
இவ்வாறு அவர் கூறினார்.