மணல்குவாரியை மூடக்கோரி திருச்சுழி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
திருச்சுழி குண்டாறு அருகே உள்ள இடங்களில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும், மணல் குவாரியை உடனடியாக மூடக்கோரியும் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திருச்சுழி,
திருச்சுழி குண்டாறு மற்றும் கிருதுமால் நதி அருகே உள்ள இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கிராமத்தில் சவடுமண் அள்ளுவதற்கு உரிமம் பெற்று தற்போது அதற்கு மாறாக திருச்சுழி ரெயில்வே மேம்பாலம் அருகே குண்டாற்றை ஒட்டிய பகுதியில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குண்டாறு அருகே உள்ள இடங்களில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சுழி கார்த்தியப்பன் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
இதைதொடர்ந்து மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும். மணல் குவாரியை தொடர்ந்து நடத்த அதிகாரிகள் தடைவிதிக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறினர்.