பெதப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பெதப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம்,
லாட்டரி சீட்டு விற்பனையில், கொடி கட்டி பறந்த மாநிலமாக தமிழகம் இருந்தது. தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டு மட்டுமல்ல, மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், அசாம் ஆகிய மாநில லாட்டரிகளும், பூடான் நாட்டு லாட்டரியும், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல மாநிலங்கள் தங்களது லாட்டரி சீட்டுகளை தமிழில் அச்சிட்டு விற்பனை செய்தன.
இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகளை வாங்கி, தினசரி வருமானத்தில் பெருந்தொகையை லாட்டரி சீட்டுக்கு செலவு செய்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலி லாட்டரி சீட்டு விற்பனையும் அதிகரித்தது. இதனால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு பெருந்தொகை வருமான இழப்பு ஏற்படும் என்ற நிலையிலும், 2002–ம் ஆண்டு அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தார். இதனால் பல குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் தற்போது குடிமங்கலம், பெதப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவு நடக்கிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒரு சில வியாபாரிகள் மொத்தமாக பெதப்பம்பட்டி பகுதிக்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் வறுமையில் வாடும் ஒரு சில தொழிலாளர்களிடம் நைசாக பேசி அவர்களை லாட்டரி விற்பனையாளராக மாற்றி வருகிறார்கள். இதனால் பெண்கள் உள்பட பலர் இப்போது பெதப்பம்பட்டி பகுதிதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுக்கட்டாக விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளால் பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே லாட்டரி விற்பனையை முழுமையாக தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.