70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன: தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது. இதற்காக 70 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-10-28 23:00 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்துவந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக கையாளப்பட்டு தீயணைப்பு வண்டி, ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிக ஆகியவற்றுக்கான தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.

கடைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் 70 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடைகளுக்கான உரிமமும் முறையாக பெறப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இன்று (திங்கட்கிழமை) முதல் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்குகிறது.

சிவகாசியில் தரமான கம்பெனிகளால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தீவுத்திடலுக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறது. வெளிமார்க்கெட்டை காட்டிலும் தீவுத்திடலில் 10 சதவீத சலுகையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். சீன பட்டாசுகளை நாங்கள் எப்போதும் விற்பனை செய்வதில்லை.

இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளைப்போல பட்டாசு விற்பனை இந்தமுறை அமையுமா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்