ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்-கார் மோதல்: தந்தை-மகள் பரிதாப சாவு 5 பேர் படுகாயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்-கார் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-10-28 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்-கார் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேன்-கார் மோதல்

நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் ராஜகோபால் (வயது 36). இவர் உடன்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாத்திரங்களுக்கு கைப்பிடி போன்றவற்றை ஒட்டி பாலீஷ் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா, மகள்கள் இந்துஜா (6), பெனிட்டா (3).

நேற்று காலையில் ராஜகோபால் தனது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார். காரை ராஜகோபால் ஓட்டினார். காரில் 7 பேர் இருந்தனர். கார் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே நெல்லையில் இருந்து குரும்பூரை நோக்கி ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வேனில் 12 பேர் இருந்தனர். வேனை நெல்லை பேட்டையை சேர்ந்த டிரைவர் பண்டாரம் (35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது வேனும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் கார் கவிழ்ந்தது.

தந்தை-மகள் பரிதாப சாவு

இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த கவிதா, முத்துசெல்வி, பூஜா, அய்யப்பன், இந்துஜா, பெனிட்டா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ராஜகோபால் உடலையும் கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேனில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் வேனை விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், வேனில் வந்த 12 பேரும் குரும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டரிங் பணிக்காக வந்தது தெரியவந்தது. விபத்தில் தந்தை- மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்