நாட்டரசன் கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; பேருராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
நாட்டரசன் கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையை பேருராட்சிகளின் உதவி இயக்குனர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை தடுக்க அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்கவும், தேவையற்ற பொருட்களை அப்பறப்படுத்திடவும், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை பகுதியில் சென்று கொசு மருந்து அடிப்பதை பார்வையிட்டார். அத்தடன் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தண்ணீர் தொட்டிகள், சுற்றுப்புற இடங்கள் தூய்மையாக இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினார்.
அப்போது பொதுமக்களிடம் குப்பைகளை தேங்கவிடாமல் அப்புறப்படுத்தவும், குப்பைகளை தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பை என்று பிரித்து வழங்கும்படியும், கொசுக்கள் உற்பத்தியாகமல் பார்த்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். அவருடன் பேரூராட்சி செயல் இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்று பேரூராட்சி அலுவர்கள் உடன் சென்றனர்.