டெல்லி பயிற்சி மையத்துக்கு ஐ.ஏ.எஸ். படிக்கச்சென்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

டெல்லி பயிற்சி மையத்துக்கு ஐ.ஏ.எஸ். படிக்கச்சென்ற மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-10-29 00:00 GMT
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் மேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி தேவி (43). இவர்களுக்கு ஸ்ரீமதி (20) என்ற மகளும், வருண்ஸ்ரீ என்ற (16) என்ற மகனும் உள்ளர். ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்து உள்ளார். வருண்ஸ்ரீ ஆலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதில் ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படி அவரின் பெற்றோர் ஸ்ரீமதியை ஐ.ஏ.எஸ். படிக்க வைக்க முவுவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீமதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கு படிக்க சென்றார்.

பின்னர் அந்த மாணவி அந்த மையத்தில் படித்து வந்தார். மேலும் பயிற்சி மையத்தின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீமதியுடன் திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியை வெளியே சென்றுவிட்டு தங்கியிருந்து அறைக்கு வந்தார். அப்போது ஸ்ரீமதி அறையின் விட்டத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய ஸ்ரீமதியை கீழே இறக்கினார்கள். அப்போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும் அங்கு பயிற்சி மைய நிர்வாகிகள் சென்று இறந்த ஸ்ரீமதியின் உடலை பார்வையிட்டனர்.

இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீமதியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதுபற்றி ஸ்ரீமதியன் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் ஸ்ரீமதியன் பெற்றோர் தங்கராஜ் மற்றும் தேவி கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து தங்கராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் நேற்று டெல்லி செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி கோவை விமான நிலையத்துக்கு வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஸ்ரீமதியின் உடல் சத்தியமங்கலத்துக்கு இன்று (திங்கட்கிழமை) கொண்டு வரப்படுகிறது. ஐ.ஏ.எஸ். படிக்கச் சென்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலாம்பாளையம் பகுதி பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து மாணவியின் தாய் தேவி கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமதி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வருவேன் என்று கூறினார். மேலும் எனது மகள் ஸ்ரீமதி, எனக்கு மற்றும் என்னுடைய கணவர் தங்கராஜ், மகன் வருண்ஸ்ரீ ஆகியோருக்கு புதுத்துணிகள் எடுத்துக்கொண்டு வருவேன் என்று கூறினார். ஆனால் திடீரென ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல்தான் தற்போது எங்களுக்கு வந்து உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் செய்திகள்