இலங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள ராஜபக்சேவுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

இலங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள ராஜபக்சேவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2018-10-27 23:00 GMT
கோவை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முல்லைப்பெரியாறில் அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்? அதில் நீங்கள் மவுனம் காக்கிறீர்கள் என்று துரைமுருகன் உங்கள் மீது குற்றச்சாட்டு சாட்டியிருக்கிறாரே?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. அதன் அடிப்படையிலே மத்திய அரசு, கேரள அரசு வைக்கின்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பிரதமருக்கும், நீர்வளத்துறை மந்திரிக்கும் தெளிவாக நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

கேள்வி:- நம் தரப்பில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் இதுபோன்ற பல திட்டங்கள் இருக்கிறது. அதை நிறைவேற்றலாமே?

பதில்:- ஆனைமலையாறு, நல்லாறு இரண்டு திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து கேரள அரசை வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம். இடைமேலையாறு 5 சதவீத பணிகள் நிறைவடையாமல் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்கள். அது நிறைவடைந்தவுடன் நமக்கு அனுமதி கொடுப்போம் என்று சொன்னார்கள். கேரள அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது. உடனடியாக நமக்கு அனுமதி கொடுத்தால், அந்த இடத்தில் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து கொறடா ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா?

பதில்:- இதுவரை அப்படியொன்றும் எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரி எல்லாம் இல்லை.

கேள்வி:-
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே, காமராஜர் காலத்தில் ஒரு புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா? அங்கு புதிய அணை கட்டப்படவேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியிருக்கிறாரே?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி ஒரு புதிய அணை கட்ட வேண்டும் என்றால், காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் இசைவு அளித்தால்தான் புதிய அணை கட்டமுடியும். நாம் கட்டுவதற்கு தயாராக இருக்கின்றோம். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நமக்கு ஆதரவு கொடுப்பார்களா? என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

கேள்வி:- டெல்லி விசாரணை ஊடகம் எடுத்த கணக்கெடுப்பில் அதிகபட்சமான அதிருப்தி இருக்கக்கூடிய அரசில் தமிழக அரசுதான் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்:- எந்தவிதத்தில் அதிருப்தி என்று சொல்கிறீர்கள், எனக்கு புரியவில்லை. காலையில் இருந்து பார்த்து கொண்டிருக்கின்றோம். நேற்றைய தினமும் நீங்கள் பார்த்தீர்கள், செல்கின்ற வழியிலெல்லாம் மக்கள் வெள்ளம் எவ்வளவு இருக்கின்றது என்பதை நேரிலே, ஊடகத்தின் வாயிலாக அத்தனை மக்களுக்கும் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். செய்திகளின் வாயிலாகவும் மக்களுக்கு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆகவே, மக்கள் அ.தி.மு.க.வுக்கு பேராதரவை கொடுக்கின்றார்கள். அதை நேற்றும், இன்றும் நீங்கள் கண் கூட பார்த்தீர்கள்.

கேள்வி:- இலங்கையில் ராஜபக்சே பிரதமர் ஆகி இருக்கிறாரே?

பதில்:- ஏற்கனவே, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருக்கும்போதே சுட்டிக்காட்டினார். தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. சர்வதேச நீதிமன்றத்திலே போர்குற்றவாளி என அறிவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜெயலலிதா மறைந்தாலும் கூட, அவரின் அரசு அவர் வழியிலே செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி:- ராஜபக்சே ஆட்சியில், மீண்டும் மீனவர்கள் சுட்டுத்தாக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றதா? அதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

பதில்:- மீனவர்கள் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம். மீனவர்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஜெயலலிதாவினுடைய அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும்.

கேள்வி:- தீபாவளி அன்றைக்கு 2 மணிநேரம் பட்டாசு வெடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் எல்லாம் கவலை அடைந்திருக்கின்றார்களே?

பதில்:- இது சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு. அதில் நான் எப்படி கருத்து சொல்லமுடியும். ஏற்கனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே அரசே சுப்ரீம் கோர்ட்டில் அவர்களுக்காக வாதாடியது. அதனால் அதை தடைசெய்யவேண்டும் என்று ஒரு தனியார் வழக்கு தொடர்ந்தார். அப்படி இருக்கின்றபோது, பட்டாசு தொழில் நலிந்துவிடும். ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துவிடுவார்கள் என்று கருதி, அரசாங்கமே சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடியது. அதை தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க, நாங்கள் இந்த தீர்ப்பை அளிக்கின்றோம், பட்டாசை தடை செய்யவில்லை என்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.

கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து...

பதில்:- ஜெயலலிதா இருக்கின்றபோது தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணியெல்லாம் தொடங்கிய நிலையில், தி.மு.க. தடையாணை வாங்கியது. அ.தி.மு.க. அரசு தேர்தல் நடத்தவில்லை என்று எப்பொழுதும் சொல்லவில்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினாலே, நீதிமன்றத்திற்கு எதற்காக சென்றார்களோ? அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெயலலிதாவினுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- அரசை கலைக்கும் யுக்தியும், சக்தியும் எங்களிடம் இருக்கிறதென்று டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அவர் அப்படித்தான் சொல்லியிருந்தார், இப்போது 18 எம்.எல்.ஏக்களை காலி செய்துவிட்டார். அவர் என்ன பெரிய மகானா சொல்வதற்கு?. அவர் அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல. அவரைப்பற்றி நீங்கள் கேட்கின்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்லமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. அ.தி.மு.க. உறுப்பினராக இல்லாத ஒருவரை நீங்களே ஊக்கப்படுத்தி கேட்டால், எப்படி சொல்வது?

கேள்வி:- அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றி....

பதில்:- அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றி தரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்