கிணத்துக்கடவு அருகே தண்டவாளத்தில் பாறைகள் விழாமல் இருக்க இரும்பு வலை அமைக்கும் பணி மும்முரம்

கிணத்துக்கடவு அருகே ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் விழாமல் இருக்க இரும்பு வலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-27 21:58 GMT
கிணத்துக்கடவு,

போத்தனூர்- பொள்ளாச்சி இடையே உள்ள 40 கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு ரெயில் காலை, மாலை கோவையில் இருந்து புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்கிறது.

கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழியில் மொத்தம் 2 ரெயில்கள் மட்டும் 4 முறை இயக்கப்படுகிறது. அரசம்பாளையம் முதல் மைலேறிபாளையம் வரை உள்ள ரெயில்வே பாதையில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் தரை மட்டத்தில் இருந்து 16 மீட்டர் பள்ளத்தில் செல்கிறது.

குறிப்பிட்ட தூரத்துக்கு பாறைகள் நிறைந்த பகுதியில் தண்டவாளம் செல்கிறது. போத்தனூர்- பொள்ளாச்சி வழித்தடத்தில் மைலேரிபாளையம் முதல் அரசம்பாளையம் வரை பாறைகள் அதிகம் உள்ளன. அந்த தடத்தில் ரெயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக பாறைகள் ஆங்காங்கே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்தபோது பள்ளமான பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செல்ல அனுமதி வழங்கினார்.

இதையடுத்து பள்ளமான பகுதியில் பக்கவாட்டில் உள்ள பாறைகள் கீழே விழாத அளவுக்கு இரும்பு வலைகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரெயில்வே துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த பணிகளை 4 மாதத்துக்குள் முடிக்க ரெயில்வே துறையினர் ஒப்பந்ததாரருக்கு அவகாசம் வழங்கினர்.

அதன் பின்னர் பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது 2 மாதங்களாக மீண்டும் பணி நடந்து வருகிறது. பாறைகள் மீது இரும்பு வலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து ரெயில்வே துறையினர் கூறியதாவது:-

போத்தனூர்- கிணத்துக்கடவு இடையில் மைலேறிபாளையம் முதல் அரசம்பாளையம் வரை 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் 16 மீட்டர் ஆழத்தில் செல்லும் ரெயில்வே பாதையில் பாறைகள் சரிந்து விடக்கூடாது என்பதற்காக இருபுறங்களிலும் பாறை மீது இரும்பு கம்பி வலை அமைக்கப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த பணி பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது.

தற்போது மீண்டும் தொடங்கி உள்ள இந்த பணி இதுவரை 80 சதவீதம் முடிவுபெற்றுள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கம்பி வலை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும் போத்தனூர்- பொள்ளாச்சி இடையே அதிவேகமாக ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் போத்தனூர்- பொள்ளாச்சி இடையே 90 கிலோ மீட்டர்வேகத்தில் ரெயில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்