மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் மந்திரி சா.ரா.மகேஷ் தகவல்
மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மந்திரி சா.ரா.மகேஷ் கூறினார்.
குடகு,
மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மந்திரி சா.ரா.மகேஷ் கூறினார்.
பூமி பூஜை
கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகு மாவட்டத்தை புரட்டி போட்டு விட்டது. மடிகேரி தாலுகா மக்கந்தூர் பகுதியில் இருந்த அரசு பள்ளி மழைக்கு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த அக்கா என்ற நிறுவனம் மக்கந்தூரில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.40 லட்சம் நிவாரணமாக வழங்கியது. நேற்று முன்தினம் மாலை அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் மாநில சுற்றுலாத்துறை மந்திரியும், குடகு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சா.ரா.மகேஷ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தார். இதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.10 லட்சம் செலவில்....
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் குடகு மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழை பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை வெகுவாக பாதித்து விட்டது. மழையால் வீடுகளை முற்றிலும் இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து உள்ளார்.
வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் தரமான வீடு கட்டிக் கொடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களும் அரசு சார்பில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.