பல்லாரி தொகுதியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாருடன் விவாதம் நடத்த தயார் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. பேட்டி

பல்லாரி தொகுதியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாருடன் விவாதம் நடத்த தயார் என்று ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-27 22:30 GMT
பெங்களூரு, 

பல்லாரி தொகுதியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாருடன் விவாதம் நடத்த தயார் என்று ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி பணிகள் செய்யவில்லை

பல்லாரி நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா நிறுத்தப்பட்டுள்ளார். உக்ரப்பாவுக்கு ஆதரவாக பல்லாரியில் முகாமிட்டு மந்திரி டி.கே.சிவக்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர், பல்லாரி தொகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி.யாக இருந்த ஸ்ரீராமுலு எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுகுறித்து பல்லாரி அருகே சண்டூரில் தனது சகோதரிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

விவாதம் நடத்த தயார்

பல்லாரி தொகுதியில் நான் எம்.பி.யாக பதவி வகித்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். அதுபற்றி பல்லாரி தொகுதி மக்களுக்கு தெரியும். அதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பேச வேண்டிய அவசியமில்லை. பல்லாரி தொகுதியில் நடந்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாருடன் விவாதம் நடத்த தயாராக உள்ளேன். விவாதத்தில் பங்கேற்க அவர் தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். பல்லாரி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

இந்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்து விட்டது. தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 78 எம்.எல்.ஏ.க்களும் பல்லாரிக்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். பண பலம், அதிகார பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று மந்திரி டி.கே.சிவக் குமார் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. நான் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், பல்லாரியில் உள்ள அனைத்து சமுதாய மக்களுடன் அன்பாக பழகி வருகிறேன். அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.

இவ்வாறு ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்