குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர்- அமைச்சர் சுற்றுப்பயணம்

குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர்-அமைச்சர் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது குளத்தூரில் வைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன் விளம்பர பதாகை அகற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-27 22:45 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், லெக்கனாப்பட்டி, ஒடுக்கூர், தாயினிப்பட்டி, மேலப்புதுவயல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

அப்போது குளத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்காக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் குளத்தூர் கடை வீதியில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பந்தல், நாற்காலிகள் அமைக்கப்பட்டு கட்சி கொடி, தினகரன் படத்துடன் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த கட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கர் வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பிற்காக நின்றிருந்தனர். அப்போது திடீரென போலீசார் அங்கு வந்தனர். இதையடுத்து அ.ம.மு.க. அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன் விளம்பர பதாகையை போலீசார் அகற்றினர். பின்னர் யாருக்கும் தெரியாத வகையில் அதனை திருப்பி வைத்து விட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்றாண்டார்கோவில் ஒன்றிய அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கார்த்திக் பிரபாகரன் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் போலீசார் அகற்றிய விளம்பர பதாகைகளை அதே இடத்தில் சரியாக வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். கட்சி மேலிட உத்தரபடி நிலவேம்பு கசாயம் வழங்குகிறோம். பாராளுமன்ற துணை சபாநாயகர், அமைச்சர் இந்த வழியாக வருவதற்காக எங்களது விளம்பர பதாகைகளை போலீசார் அகற்றியது கண்டனக்குரியது என கூறி விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நேற்று இரவு அ.ம.மு.க. அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன் விளம்பர பதாகைகளை போலீசார் அகற்றினர்.

இதையடுத்து நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுப்புடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குளத்தூருக்கு வந்து பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்