பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

தேவிபட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு ரூ.58,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-10-27 22:15 GMT

பனைக்குளம்,

தேவிபட்டினத்தில் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் மழைநீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும், ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின்பேரில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில் யூனியன் ஆணையாளர் சேவுகபெருமாள், உதவி பொறியாளர் ஹேமா, ஊராட்சி செயலாளர் முனியசாமி ஆகியோர் தேவிபட்டினத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றி அந்த பகுதியில் நிரந்தரமாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி அந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எச்சரிக்கையை மீறி 11 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து சுமார் 10 கிலோ பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.58,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 தண்ணீர் பாக்கெட் மூடைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்