உடுமலை பகுதியில் பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் வேதனை

உடுமலை பகுதியில் பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2018-10-27 22:45 GMT

உடுமலை,

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் தென்னை, கரும்பு,வாழை என ஆண்டு விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்ததன் காரணமாக தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு தேங்காய் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக மல்பெரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

உடுமலை பகுதியில் மட்டும் சுமார் 1500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெண்பட்டு கூடுகள் ரூ.620 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.350 வரை மட்டுமே விற்பனையாகிறது.

இதுகுறித்து விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் வகையில் சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. ஒரு முட்டை ரூ.22.25–க்கு வாங்கி பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். உடுமலை பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியதன் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவு ஒரு கிலோவிற்கு ரூ.300 செலவாகிறது.

தற்போது கோடைமழை, தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததன் காரணமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1500 கிலோ பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் கர்நாடக மாநிலம் ராம்நகர், கோவை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக பட்டுக்கூடுகள் விலை சரிந்து காணப்படுகிறது. மேலும் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பட்டுக்கூடு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்