சேரம்பாடி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
சேரம்பாடி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள சப்பந்தோடு, புஞ்சைக்கொல்லி, காரக்கொல்லி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்ல சேரம்பாடி அருகே சுங்கம் பகுதிக்குதான் வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலை சேரம்பாடியில் இருந்து சுங்கம் வழியாக அய்யன்கொல்லிக்கு செல்லும் இணைப்பு சாலையாகவும் இருக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் இருந்து சப்பந்தோடு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அவரச தேவைகளுக்கு ஆம்புலன்சு வந்து செல்ல கூட முடியாத சூழல் நிலவுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. எனவே பள்ளி மாணவ– மாணவிகளும் சாலையில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் பள்ளத்தில் தவறி விழுந்து இருசக்கர வாகன ஓட்டிகள் காயம் அடையும் அவலம் நிலவுகிறது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி பழுதான அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.