சென்னையில் பயணிகள் தவறவிட்ட பைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர்

சென்னை வந்த ரயிலில் பயணிகள் தவறவிட்ட பைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

Update: 2018-10-26 23:09 GMT
சென்னை,

வண்டலூரை சேர்ந்தவர் வர்ஷினி (வயது 29). இவர் நேற்று காலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரம் வந்தது இறங்கினார். வர்ஷினி வீட்டுக்கு சென்ற பின்பு தான், கைப்பையை ரெயிலில் மறந்து விட்டு வந்தது அவருக்கு தெரியவந்தது.

உடனே அவர் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி எண்: 182-ல் புகார் அளித்தார். இதையடுத்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது வர்ஷினி விட்டு சென்ற கைப்பையை அவர்கள் மீட்டனர். அதில் 3 விலையுயர்ந்த செல்போன்கள் இருந்தது.

அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்புபடையினர் அந்த கைப்பையை வர்ஷினியிடம் ஒப்படைத்தனர். அதேபோல் தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த சந்தோஷபுரத்தை சேர்ந்த சிங்காரவேலு(31) என்பவர் ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகளுடன் தவறவிட்ட பையையும், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்