மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடும் பாதிப்பு: 5 மாதத்தில் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் - நாராயணசாமி ஆவேசம்

மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியை 5 மாதத்தில் வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-10-26 23:45 GMT

புதுச்சேரி,

சி.பி.ஐ. துறையை அதிகார துஷ்பிரயோகத்துக்காக கைப்பாவையாக வைத்திருக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

மத்திய அரசு சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக பயன்படுத்தி அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனை கண்டித்து நமது தலைவர் ராகுல்காந்தி சி.பி.ஐ. அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மத்தியில் ஆளும் மோடி அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி வந்த பிறகுதான் விலைவாசி உயர்ந்துள்ளது. தற்போது ஊழல் மலிந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அதிகாரத்தால் முடக்கி வருகிறார்கள்.

ரபேல் விமான ஊழல் விவகாரத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரச்சினை விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் குமார் வர்மா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஊழலில் திளைத்த ராகேஷ் அஸ்தானா என்ற அதிகாரியை சிறப்பு இயக்குனராக நியமித்துள்ளனர்.

ரபேல் போர் விமானம் வாங்கியதில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ளதை மோடியால் மறைக்க முடியவில்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியை இன்னும் 5 மாதத்தில் வீட்டிற்கு அனுப்புவோம். மோடியின் ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது.

அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து நம் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்கவேண்டும். புதுவை தொகுதியில் ராகுல்காந்தி யாரை வேட்பாளராக அறிவித்தாலும் நாம் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசியதாவது:–

எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்தனர். ரபேல் விமான ஊழலை கண்டுபிடித்ததால் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கினார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ. முழு சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் சி.பி.ஐ.யை பாரதீய ஜனதா கட்சியின் ஒரு பிரிவினை போன்று நடத்துகிறார்கள். வங்கி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இந்தியாவை விட்டு தப்பியோட செய்கிறார்கள்.

புதுவை கவர்னர் கிரண்பெடி புதுவை மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்படுகிறார். விரைவில் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார். அவர் சமூக பொறுப்புணர்வு நிதியினை தவறாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் நமது அமைச்சரவை மக்களுக்காக உழைக்கிறது.

இவ்வாறு சஞ்சய்தத் பேசினார்.

மேலும் செய்திகள்