வீடு கட்டும் பணியில் குறைபாடு: ஒப்பந்ததாரருக்கு அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
குறைபாடுகளுடன் வீடு கட்டிய ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,
கோவை சிங்காநல்லூர் போயர்வீதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் தனது வீட்டை பராமரிப்பு பணி செய்ய முடிவு செய் தார். இதற்கான பணிகளை செய்ய அவர் போத்தனூரை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் அவர், அந்த பணிகளை செய்ய சுரேஷ் பாபுவிடம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் வழங்கினார்.
இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட சுரேஷ்பாபு, வீட்டின் பராமரிப்பு பணிகளை சரியாக செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. ஒப்பந்தம் செய்து கொண்டபடி சுற்றுச்சுவரை செங்கல் வைத்து கட்டாமல் ஹாலோபிளாக் கல்லை கொண்டு கட்டியது உள்ளிட்ட குறைபாடுகள் இருந்துள்ளது.
எனவே தனது வீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரவேண்டும் என்று சுரேஷ்பாபுவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்க வில்லை. மேலும் வீட்டில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து உள்ளார். இது குறித்து சவுந்தரராஜன் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.பி.பாலச்சந்திரன், அமுதம் ஆகியோர் ஒப்பந்ததாரர் சுரேஷ்பாபுவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும் அதை 9 சதவீத வட்டியுடன் சவுந்தரராஜனுக்கு வழங்கவேண்டும். வழக்கு செலவுக்காக ரூ.2500-ம் வழங்கவும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.