மேட்டுப்பாளையம் அருகே: துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம் - தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

மேட்டுப்பாளையம் அருகே விவசாயிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-10-26 22:00 GMT
மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை நான்சச் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53). இவர் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு பில்லூர் அணை அருகே உள்ள செங்கல்புதூரை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி என்பவருடன் சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்ய முடிவு செய்தார். அவர்கள் செங்கல்கொம்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் 350 வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

தோட்டம் அருகில் கண்காணிப்பு பணிக்காக குடிசை அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே வீடுகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தோட்டத்தை பார்க்க 2 பேரும் சென்றனர். பின்னர் இருவரும் தோட்டம் அருகே அமைக்கப்பட்டு இருந்த குடிசையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பொன்னுசாமிக்கும், தங்கராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றவே அங்கிருந்து எழுந்த தங்கராஜ் அருகே உள்ள லட்சுமணன் என்பவரின் குடிசைக்கு சென்றுவிட்டார். இதில் பொன்னுசாமிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

உடனே அவர் அங்கிருந்து நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தங்கராஜ் இருந்த இடத்துக்கு சென்றார். அங்கு இருந்த தங்கராஜிடம் 3 மாதங்களுக்கு முன்புதான் என்னுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறாய். எனவே நானே இனி விவசாய பணியை கவனித்துக்கொள்கிறேன், என்று கூறினார்.

இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி தான் வைத்து இருந்த நாட்டு துப்பாக்கியால் தங்கராஜை நோக்கி சுட்டார். இதில் தங்கராஜிக்கு தோள்பட்டை மற்றும் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு லட்சுமணனும், அந்த பகுதியில் வசிக்கும் முகமது யூசுப்பும் ஓடிவந்தனர். அதற்குள் பொன்னுசாமி துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே படுகாயம் அடைந்த தங்கராஜிக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்தனர். பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் ஜீப்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

இதற்கிடையே போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கராஜ் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பொன்னுசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்