குளச்சல் நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்

சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று குளச்சல் நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-26 22:45 GMT
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு கிராமத்தில் குடிநீருடன் உப்புநீர் கலந்து வினியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து குளச்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்துக்கு பங்குதந்தை சகாய செல்வம் தலைமை தாங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், பொதுப்பணித்துறை அதிகாரி செல்வமணி மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே பதிலைத்தான் கடந்த முறை போராட்டம் நடத்திய போது எங்களிடம் தெரிவித்ததாக பெண்கள் குற்றம்சாட்டினர்.

எனினும் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்