காதலிக்குமாறு என்ஜினீயரிங் மாணவிக்கு மிரட்டல்; 2 பேர் கைது

காதலிக்குமாறு என்ஜினீயரிங் மாணவிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-26 23:00 GMT
அழகியமண்டபம்,
ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில், இரணியலை அடுத்த கட்டிமாங்கோட்டை சேர்ந்த 19 வயது மாணவி படித்து வருகிறார்.

இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினமும் காலை கல்லூரிக்கு சென்றார். பின்னர், மாலை கல்லூரி பஸ்சில் குருந்தன்கோடு ஆசாரிவிளை நிறுத்தத்தில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (வயது 19), அவரது நண்பர்கள் விஜயன் (26), விஜூகுமார்(22) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இதில் ஜார்ஜ் மாணவியின் அருகில் சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் தன்னை காதலிக்க வில்லையென்றால் கடத்தி சென்று விடுவதாக மிரட்டியதாகவும், அவரது நண்பர்களும் மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி அழுதார். பின்னர், இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயன், விஜூகுமார் ஆகிய 2 பேர்களையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜார்ஜை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்