தேனியில், மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் : மாணவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு

தேனியில், மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-26 21:45 GMT
அல்லிநகரம்,

தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த சேகர் மகன் அன்புச்செல்வன் (வயது 17). இவர், அல்லிநகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரய்யா மகன் ஆகாஷ் (20) என்பவரும் நண்பர்கள். ஆகாஷ் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு, தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

அன்புச்செல்வன் நேற்று தனக்கு காய்ச்சல் என்று சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அன்புச்செல்வன், ஆகாஷ் மற்றும் அல்லிநகரம் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாண்டித்துரை மகன் கார்த்தி (14) ஆகிய 3 பேரும் நேற்று அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் அருகில் உள்ள பனசலாற்றில் குளிக்க சென்றனர். கார்த்தி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஆற்றில் குளித்து விட்டு 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஓட்டினார். தேனி-வீரப்ப அய்யனார் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது, வடபுதுப்பட்டி அம்மாபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெயக்குமார் (24) என்பவர் ஒரு வேனில் வீரப்ப அய்யனார் கோவிலை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அங்குள்ள ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான 3 பேரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அன்புச்செல்வனின் தந்தை சேகர் அல்லிநகரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் வாகன காப்பக டிக்கெட் வழங்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஆகாசின் தந்தை வீரய்யா ஏற்கனவே இறந்து விட்டார். ஆகாசுக்கு ஒரு அண்ணனும், ஒரு தங்கையும் உள்ளனர். தாய் சுதாவின் பராமரிப்பில் 3 பேரும் வாழ்ந்து வந்தனர்.
குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே ஆகாஷ் வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டார். பலியான மற்றொரு சிறுவனான கார்த்தியின் தந்தை பாண்டித்துரை பால்வியாபாரி ஆவார். விபத்தில் 3 பேரும் பலியான சம்பவம், அல்லிநகரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்