அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-10-26 22:30 GMT
மீஞ்சூர்,

தமிழக அரசின் உத்தரவின் பேரில் டெங்கு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணி மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வாணைய தலைவரும் டெங்கு மற்றும் வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான ராஜாராம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள அத்திப்பட்டு புதுநகரில் மழைநீர் செல்லும் கால்வாய்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

வீட்டின் உரிமையாளர்களை அழைத்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் சென்னை குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதை சான்றுகள் மூலம் அறிந்தார்.

தொடர்ந்து மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து ஆண்டார்மடம் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

அப்போது பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் கார்த்திகேயன், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் கவுரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், மண்டல துணை வளர்ச்சி அலுவலர் குணசேகரன், பொதுப்பணி உதவி பொறியாளர் கண்ணன் ஊராட்சி செயலாளர் பொற்கொடி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்