சேலத்தில்: சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - போலீசாருடன் வாக்குவாதம்

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2018-10-25 22:00 GMT
சேலம், 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். இதில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர் ஆகியோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கப்பட வேண்டும். பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாட்கள் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் விருப்ப பணி மாறுதல் கோரிய அனைவருக்கும் கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் மதியம் டவுன் போலீசார் போராட்டக்காரர்களிடம் உங்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரை தான் போராட்டத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. தற்போது 1 மணிக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள், எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். இதற்கு அவர்கள், நாங்கள் காலை 11.40 மணியளவில் தான் போராட்டத்தை தொடங்கினோம். இதனால் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்ததுடன், அங்கிருந்து செல்லுமாறு போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பழைய நாட்டாண்மை கழக அலுவலகத்திற்குள் நுழைந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை கூறுகையில், சத்துணவிற்கு சிறிய அளவிலான முட்டையை கொடுத்தும், உணவு பற்றாக்குறையாக வழங்கி விட்டு, சத்துணவு அமைப்பாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும், என்றார்.

மேலும் செய்திகள்