பழனி அருகே: புதைந்து கிடக்கும் பழங்கால பொருட்கள் - அகழாய்வு நடத்த தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை
பழனியை அடுத்த இரவிமங்கலத்தில் பழங்கால பொருட்கள் ஏராளமாக புதைந்து கிடக்கின்றன. அங்கு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி,
பழனி அருகே இரவிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண் கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் கிடக்கின்றன. சுமார் 200 ஏக்கர் பரப்பில் இந்த பழங்கால சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த இடத்தை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் கூறியதாவது:-
இரவிமங்கலம் பகுதியில் பாலாறு-பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய போதும், அப்பகுதியில் விவசாய பணிக்காக நிலத்தை சீரமைத்த போதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மண்ணுக்குள் புதைந்திருந்த பழங்கால பொருட்கள் சிதைந்துவிட்டன.
மீதமுள்ள 100 ஏக்கரில் சுமார் 180-க்கும் மேற்பட்ட பழங்கால சின்னங்கள் கிடைத்துள்ளன.
இரவிமங்கலம் பகுதியில் உள்ள புதைகுழி பகுதிகளில் சங்க காலத்தில் 3 இரும்பு உருக்காலைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்க தேவையான சுண்ணாம்பு கட்டிகள் இன்றும் அப்பகுதியில் உள்ளன. சங்க கால புதைகுழிகள் பொதுவாக வட்ட வடிவிலேயே காணப்படும். அதுபோல இங்குள்ள 2 புதைகுழிகளும் வட்ட வடிவில் உள்ளன. சங்க காலத்தின் இறுதியில் இந்த வடிவிலான புதைகுழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இரவிமங்கலம் பகுதியில் இருக்கும் சின்னங்கள், புதைகுழிகளை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் பகுதியில் கிடைத்ததைவிட அதிக சின்னங்கள், பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.