அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டது

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-25 22:00 GMT
அடுக்கம்பாறை,
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், நகர்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சல் பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளில் உள்ள படுக்கைகளை சுற்றி கொசுவலை அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளன.

டெங்கு, பன்றி மற்றும் காய்ச்சல் பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்