பணி வழங்காததை கண்டித்து ஊட்டி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் காத்திருப்பு போராட்டம்

பணி வழங்காததை கண்டித்து ஊட்டி அரசு கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டார்.

Update: 2018-10-25 22:45 GMT

ஊட்டி,

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் பணி வழங்க மறுத்து விட்டது. இதனால் ஜெயசிங் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டார். அப்போது சீனியாரிட்டி முறை இல்லாததால் பணி வழங்க வில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இதை கண்டித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து ஜெயசிங் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளர் ஜெயசிங் வந்தார். ஆனால் அவர் கல்லூரி வளாகத்துக்குகள் நுழைய கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து கல்லூரி நுழைவுவாயில் கதவுகளும் அடைக்கப்பட்டன.

இதனால் அவர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருப்பதையும், அதன் முன்னால் விரிவுரையாளர் ஜெயசிங் நின்றிருப்பதை கண்டனர். தொடர்ந்து ஜெயசிங்கிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உயர்கல்வித்துறை வி‌ஷயத்தில் தலையிட முடியாது என போலீசார் தெரிவித்தனர். அப்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக ஜெயசிங் உறுதி அளித்தார்.கல்லூரி விரிவுரையாளரின் போராட்டத்தால் மாணவ– மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கவுரவ விரிவுரையாளர் ஜெயசிங் கூறியதாவது:–

நான் எம்.ஏ., எம்.பில். அரசு கல்லூரியில் படித்துள்ளேன். மேலும் விரிவுரையாளர் பணிக்கான தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளேன். ஏற்கனவே உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி உள்ளேன். பின்னர் இடமாறுதல் பெற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 2½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் எனக்கு கல்லூரி நிர்வாகம் பணி வழங்க மறுத்து விட்டது. மேலும் பட்டப்படிப்புகள் மற்றும் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற எனக்கு பணி வழங்காமல் எந்தவித தகுதியும் இல்லாத நபர்களுக்கு கல்லூரி நிர்வாகம் பணி வழங்கி வருகிறது.

இதேபோல் போலி சான்றிதழ்களை வைத்து கொண்டு பலரும் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து போலீசார் ஊட்டியில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனக்கு வேலை மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து உயர்கல்வி துறை இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனக்கு வேலை வழங்கக்கோரி உயர்கல்வி துறை அலுவலகம் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் எனக்கு வேலை மறுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, அரசு உத்தரவின்படி கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டி கல்லூரியில் பணி மூப்பு இல்லாததால் ஜெயசிங்குக்கு வேலை மறுக்கப்பட்டு உள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்