வால்பாறையில் முதன்முறையாக சோலையார் அணையில் 125 நாட்களாக 150 அடி தண்ணீர்

சோலையார் அணையில் முதன்முறையாக 125 நாட்களாக 150 அடி தண்ணீர் உள்ளது.

Update: 2018-10-25 22:30 GMT

வால்பாறை,

பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் (பி.ஏ.பி.) அடிப்படை அணையாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை உள்ளது. இது 160 அடி கொள்ளளவு கொண்டது. வால்பாறையில் எங்கு மழை பெய்தாலும் சோலையார் அணைக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள்முதல் வால்பாறை பகுதியில் பெய்யக்கூடிய மழை தண்ணீர் முழுவதும் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆறுகளின் மூலமாக சோலையார் அணையை வந்து சேர்ந்து விடும்.

இதே போல நீரார் மற்றும் சின்னக்கல்லார் ஆகிய 2 அணைகளில் இருந்தும் சோலையார் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். சோலையார் அணைக்கு வந்து சேரும் தண்ணீர் மின்நிலையங்கள் இயக்கப்பட்டு ஒப்பந்தப்படி கேரளாவிற்கும், தமிழ்நாட்டில் உள்ள பரம்பிக்குளம் அணைக்கும் திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீர் ஆழியார்அணை, திருமூர்த்தி அணை ஆகிய அணைகளுக்கும் மின் உற்பத்திக்குப்பின் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆழியார்அணை மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு செல்லும் தண்ணீர் பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் வட்டார பகுதி மக்களின் விவசாய தேவைகளுக்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு மின்உற்பத்தி, விவசாயம், குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் சோலையார் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1972–ம் ஆண்டு திறக்கப்பட்ட சோலையார் அணை பலமுறை முழு கொள்ளளவை தாண்டிய உள்ளது. அப்போது அணையின் மதகும் திறக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்படி மே மாதம் 26–ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் 11 –ந் தேதி சோலையார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அதைத்தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஜூன் மாதம் 23 –ந் தேதி 150 அடியை எட்டியது. ஜூலை 1–ந் தேதி சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. அன்று முதல் செப்டம்பர் மாதம் 10–ந் தேதி வரை சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியிலேயே இருந்தது. அப்போது முதல்முறையாக 71 நாட்கள் சோலையார் அணை தனது முழு கொள்ளளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மின் நிலையங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அணையில் தற்போது 154 அடி தண்ணீர் உள்ளது. அதன்படி ஜூன் 23–ந் தேதி முதல் நேற்று வரை 125 நாட்களாக சோலையார் அணையில் 150 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பது இதுவே முதன்முறை ஆகும். தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மழை பெய்யும் நிலையில் சோலையார்அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

சோலையார் அணையில் தற்போது 154 அடி தண்ணீர் நிரம்பி இருப்பதை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். அணையில் அதிக தண்ணீர் இருப்பதால் சமவெளிப்பகுதி மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்