தாராபுரம் அருகே பெண் கொடூரக்கொலை; சாக்குமூடையில் உடலை கட்டி ஓடையில் வீச்சு

பெண்ணை கொன்று அவருடைய உடலை சாக்குமூடையில் கட்டி உப்பாறு ஓடையில் வீசிச்சென்ற கொலையாளிகள் யார்? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-25 23:00 GMT

தாராபுரம்,

தாராபுரம்–திருப்பூர் சாலையில் நஞ்சியம்பாளையத்தில் உப்பாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலையில் பாலத்தின் வழியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது பாலத்தின் கீழ் உப்பாறு ஓடையில் ஒரு சாக்குமூடை கிடப்பதையும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும், சாக்குமூடையின் குடும்பி பகுதியில் மனித தலை தெரிவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனே தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த மூடையை போலீசார் பிரித்து பார்த்தபோது அந்த சாக்குமூடையில் 35 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணின் உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது.

அந்த பெண் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்பதால் உடலில் புழுக்கள் நெளிந்தன. மேலும் அந்த பெண் பச்சை மற்றும் நீல நிறம் கலந்த சேலையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். கையில் வளையல்கள் அணிந்து இருந்தார். காதுகளில் தங்க கம்மல்கள் இருந்தன. மேலும் அந்த பெண்ணின் கழுத்தில் தங்க தாலி இருந்தது. எனவே அந்த பெண் திருமணமானவர் என்று தெரியவந்துள்ளது.

எனவே நகை மற்றும் பணத்திற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அந்த பெண் அணிந்து இருந்த தங்கத்தாலி மற்றும் வளையல், கம்மல் அப்படியே இருந்தன. எனவே கள்ளத்தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் கூறும்போது‘‘ அந்த பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் அவருடைய உடலை சாக்குமூடையில் கட்டி, அந்த மூடையை கார் அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தில் வைத்து இரவு நேரத்தில் பாலத்தின் கீழ் வீசிச் சென்றுள்ளனர். தாராபுரத்தில் இருந்து திருப்பூர் செல்லும் போது அவசரமாக அந்த மூடையை 60 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து கொலையாளிகள் தூக்கி வீசியதில் அந்த மூடை தரையில் விழும்போது அதன் குடும்பி பகுதியில் உள்ள கட்டு அவிழ்ந்து உள்ளது. எனவே கொலையாளிகள் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். மேலும் தாராபுரம், அலங்கியம், குண்டடம் மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த சில நாட்களில் பெண்ணை காணவில்லை என்று யாராவது புகார் செய்துள்ளார்களா? என விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. குறிப்பாக ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த பெண்களும் வெவ்வேறு விதமான தாலியை அணிந்து இருப்பார்கள். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்து இருந்த தாலியை வைத்து அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நஞ்சியம்பாளையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவு நேரம் சந்தேகத்திற்கு இடமாக பாலத்தின் மேல் ஏதாவது வாகனம் நிற்பது பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பெண்ணை கொன்று அவருடைய உடலை சாக்குமூடையில் கட்டி உப்பாறு பாலத்தின் கீழ் கொலையாளிகள் வீசி சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பெண்ணை கடத்தி சென்று கொலை செய்தால் பிணத்தை 3 நாட்கள் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. கொலை செய்த உடனே போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் உடலை உடனே வேறு எங்காவது தூக்கி வீசி சென்று இருப்பார்கள். ஆனால் உப்பாறு ஓடையில் சாக்கு மூடையில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகி இருக்கும் என்பதால் அந்த பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் அவருடைய உடலை சாக்குமூடையில் கட்டி வீட்டில் வைத்து இருக்க வேண்டம். பின்னர் உடல் அழுகத்தொடங்கியதும் துர்நாற்றம் வீசும்போது வீட்டில் பிணம் இருந்தால் தெரிந்து விடும் என்றும், எனவே அந்த பிணத்தை வாகனத்தில் ஏற்றி உப்பாறு பாலத்தின் கீழ் வீசிச்சென்று இருக்கலாம். எனவே அந்த பெண்ணை திட்டமிட்டு கொலை செய்து விட்டு உடலை வீட்டில் வைத்துவிட்டு உடல் அழுகத் தொடங்கியதும் வீசி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

தாராபுரம்–திருப்பூர் சாலையில் உப்பாறு பாலத்தின் கீழ் கிடந்த சாக்குமூடையில் பெண்ணின் பிணம் இருப்பதாக அந்த பகுதி முழுவதும் தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து நஞ்சியம்பாளையம், குப்புச்சிப்பாளையம், தெக்கலூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உப்பாறு பாலத்திற்கு வந்து குவிந்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நேரம் செல்ல கூட்டம் அதிகமானதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்