கன்னிவாடி அருகே: சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
கன்னிவாடி அருகே சாலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கன்னிவாடி,
கன்னிவாடி அருகே வடக்கு மேட்டுப்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயிகளே அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள் விளைபொருட்களை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் இங்குள்ள மாணவ-மாணவிகள் திண்டுக்கல் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு சாலை, பஸ் வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று வட்டபாறை பகுதியில் திடீரென திரண்டனர். பின்னர் தங்கள் பகுதிக்கு சாலை, பஸ் வசதி செய்துதர வேண்டும் என்று கோரி அனுமந்தராயன்கோட்டை-கரிசல்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கன்னிவாடி, செம்பட்டி மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசந்திரன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, எங்கள் பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்ல பெரும் சிரமமடைந்து வருகிறோம். மேலும் எங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாக பஸ்கள் வரவில்லை. இதனால் மக்கள், மாணவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர். பின்னர் புதிதாக சாலை அமைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.