விழுப்புரத்தில் நாட்டு வெடிகள் தயாரிப்பு: அண்ணன்-தம்பி கைது
விழுப்புரத்தில் நாட்டு வெடிகள் தயாரித்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் முத்தோப்பில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் முத்தோப்பு பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முத்தோப்பு அகரம்பாட்டையில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகள் மற்றும் வெடிகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அங்கு வெடிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 40), இவருடைய தம்பி ராஜகணபதி (31) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
பாலச்சந்திரன், ராஜகணபதி ஆகியோர் தங்களது தாய் மாரிமுத்துவின் பெயரில் கெடார் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அதனூர் கிராமத்தில் உரிமம் பெற்று வெடிமருந்து தயாரிக்கும் குடோன் வைத்திருப்பதும், இந்த உரிமத்தின் மூலமாக இவர்கள் விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு பகுதியில் இருந்து நாட்டு வெடிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வந்து வெடி தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் அளவுக்கு அதிகமாக மருந்துகளை பயன்படுத்தி அதன் மூலம் அதிக ஒலி எழுப்பக்கூடிய அளவிற்கு நாட்டு வெடிகளை தயாரித்து பண்டிகை காலங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத அதனூரில் உள்ள குடோனில் வைத்துதான் வெடிகளை தயாரிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் விழுப்புரத்தில் உள்ள தங்கள் வீட்டிலேயே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக வெடிகளை தயாரித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாலச்சந்திரன், ராஜகணபதி ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 53 கிலோ வெடி உப்பு, 13 கிலோ சல்பர், வெடிமருந்துகளை செலுத்துவதற்குரிய பேப்பர் ரோல்கள், 50 கன்னிவெடி திரிகள், சணல்கள் மற்றும் தென்னங்குச்சிகளுடன் கூடிய வாணவெடிகள், நாட்டு வெடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். பின்னர் கைதான இருவரும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.